×

கோடை விழா இன்று தொடக்கம் ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம்

* அண்ணாபூங்காவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு

சேலம் : ஏற்காடு கோடை விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதனால், மலைப்பாதையில் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கோடை விழா இன்று (31ம் தேதி) தொடங்கி ஜூன் 2ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. கோடைவிழாவிற்காக ஏற்காடு அண்ணாபூங்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மலர்களை கொண்டு, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் ரோகிணி தொடங்கி வைக்கிறார்.

கோடைவிழா தொடர்பாக கலெக்டர் ரோகிணி கூறியதாவது: கோடை விழா மலர் கண்காட்சி இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஏரிபூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி சென்று வர வசதியாக போக்குவரத்து நெருக்கடி இன்றி பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே பயோ டாய்லெட் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விழாவையொட்டி செல்லப்பிராணிகள் கண்காட்சி, படகு போட்டி, சிறப்பு புகைப்பட போட்டி, நாட்டுப்புற கலைகள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஏரி பூங்கா பகுதியில் இருந்து இதர சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு செல்ல கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்குகிறோம்.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சேலத்தில் இருந்து செல்லும் பஸ், சுற்றுலா வாகனங்கள், கார், டூவீலர் என அனைத்து வாகனங்களும் ஏற்காடு அடிவாரம் வழியே மலைப்பாதையில் செல்ல வேண்டும். ஏரி பகுதிக்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிடும். பஸ்கள் மட்டும் பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படும். மேலே மலையில் இருந்து கீழே  இறங்கும் வாகனங்கள் அனைத்தும் குப்பனூர் வழியே செல்ல வேண்டும். 3 நாட்களுக்கு இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். இதுபோக வாகனகளை நிறுத்தி வைக்க பார்க்கிங் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கோடைவிழாவையொட்டி ஏற்காடு முழுவதும் எஸ்பி தீபா கனிக்கர் தலைமையில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள், அண்ணாபூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், மான்பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து சுற்றி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Tags : summer ceremony ,highway ,Yercaud , Traffic Diversion,Yercaud ,Summer Season ,salem
× RELATED அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை...